பெண்

பெண்
பெண்ணே அறிந்துக் கொண்டேன் , இயல்பை அழகு என்பேன்

Monday, 15 May 2017

பெயர் ஒன்றை சூட்டிவிடு நம் உறவுக்கு

                போராட்டக் களத்தில் என் மனம்.  வேளுக்கும் வீச்சுக்கும் நடுவில். காதலுக்கும் நட்புக்கும் மத்தியில்.  என்ன நான் செய்வது ?  விடைத் தெரிந்திட ஆவல்.... என் மனதில் காதல் என்று சொல்வதற்கு முன்,  உன்மீதெனக்கு  அளவில்லாத பாசமும் பற்றும் எனலாம்.   எப்படி வார்த்தையில் புகுத்துவது ? பிறக்காதக் குழந்தை மீது தாய் கொண்டிருக்கும் பாசத்தைப் போல, பிறக்காத நம் காதல்  மீது நான் கொண்டிருக்கும் பாசம் போல என உவமைப் படுத்தியும் தராசு சமமாக இல்லை, ஒப்பீடு செய்ய.... என் காதல் இன்னும் வலிமையானதோ .....?


           என் மனதில் காதல்தான், உன் மனதில் என்னவென்று  உரக்கக் கேட்டிட  ஆசை. தடுக்கிறது பெண்மை என்னை .  பெண்மை என்று மட்டும்  சொல்லி, பொய் உரைக்க நான் விரும்பவில்லை.  கொஞ்சம் கர்வமும்தான். கர்வம் என்று நான் சொல்ல முற்படுவது, பெண் திமிரோ , ஆணவமோ இல்லை. நாணம் கலந்த ஒரு பய உணர்வெனலாம்.... என்னத்தான் காதல் கொண்டாலும், பெண்ணாகிய நான் முதலில் காதலை எப்படிச் சொல்வது?  ஒரு வேளை, நீ என்னை மறுத்துவிட்டால் ? என் காதலை காலடியில் போட்டு மிதித்து விட்டால் ? என் உணர்வை நீ உதறிவிட்டால் ? என் காதலை நீ காமமாக எண்ணிவிட்டால் ? என்ன நான் செய்வது ? தூள் தூளாய் நொறுங்கிப் போவேன்... நான் உன்மேல் கொண்ட காதலை யாராலும், ஏன் உன்னாலும் கூட உணர முடியாது.....

                         
               பெண்கள் பெரும்பாலும் முதலில் காதலை ஆணிடத்தில் சொல்லாததற்கு ஒரே ஒரு காரணம்தான். காதலன் அதனை மறுத்துவிட்டால் என்ன செய்வதென்பதே ஆகும்.  அப்படி மறுத்தாலும் சிறு வலியை மட்டும்தான் கொடுக்கும். மாறாக, தன்  காதலை எள்ளி நகையாடிவிட்டால் போதும், பெண்களால் அதனை ஏற்க இயலாத நிலை. ஏற்கும் பக்குவமும், மன திராணியும் இன்னும் பெண்களிடத்தில் வரவில்லை. முக்கியமாக எனக்கு.... உள்ளுணர்வைத் திரட்டி, காலடியில் வைக்கும் பட்சத்தில், காதலன் அதனை எட்டி உதைப்பது நியாயமா ? உண்மையாகக் காதலிக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் மரண வலியைத்தான் கொடுத்திருக்கும்.... பெண்களுக்கு காயம் என்பது ஆழமானதாகும். ஏனென்று தெரியுமா ?  அவர்களின் அன்பும் ஆழமானது. அதனால்தான்... நானும் அந்த வலியினை ஏற்க்கத் தயாராய் இல்லை, அந்த வலி நீ தந்ததாக இருந்தால்...


                   ஒரு பூவினோடு ஒரு வாசம் தானே அன்பா.... ஒரு காதல் அது உன்னோடுதான். ஒரு வாழ்வு அது உன்னோடுதான். வெறும் வாய் வார்த்தையன்று இது.  உயிர் கொண்டிருக்கும் ஜீவனின் வாக்குமூலம். எங்கிருந்து வந்தது காதல் .... ? எதனால் உன்மீதெனக்கு?  அழகாளால், ஆற்றலாலா?  எதுவுமே இல்லை.  வெளித்தோற்றத்தைக் கொண்டு காதல் கொள்ளும் அற்ப பிறவி நானன்று அன்பா :)  எந்த ஆணையும் கண் பார்த்து பேசியதில்லை, நெருங்கி நின்றதுமில்லை, வேறொரு உறவு கொண்டு பார்த்ததுமில்லை, உன்னைத்தவிர.  ஏதோ உன்னிடம்.  நாம் பரிட்சையாமனவர்கள் அன்று அன்பா.... துளையிடும் உன் பார்வை, பொய்யில்லை அதில்.  அதுவே நீ....


                   இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா என்று ஆண்கள் யோசிக்கலாம்.. பொதுவாகப் பெண்கள் ஏமாற்றுக்காரர்கள், பணத்திக்காக காதலிப்பவர்கள் என்பதை கடந்துப் பார்த்தல் மட்டுமே, இதுப்போன்ற மனம் கொண்ட பெண்களும் உள்ளனர் என்பதை அறிய முடிகிறது...  என் காதலும் அப்படித்தான், உன் கண் வழிப் பார்த்தால் மட்டுமே, என் காதல் புரியும்.... எனக்கான பாதை உன் வீட்டில்தான் முடிய வேண்டும், அன்பா... விடை அறியாமலேயே விடைக்கொடுக்கிறேன், அதனால் (விரைவில்) பெயர் ஒன்றை சூட்டிவிடு நம் உறவுக்கு .....


***தள்ளாடும் வயதில் தளராத அன்பு, காதல் 💛


         

Monday, 28 November 2016

பாரதியாய் எனெக்கென உயிர்ப் பிறந்தாயோ ?

    ஒரு அழகிய  திருமண பந்தத்தின் மலர்ச்சியே குழந்தைகள். ஏனென்று புரியவில்லை எனக்கு. எனக்கு மட்டும் அல்ல, பலருக்கும் மனதில் எழுந்த மிகவும் பரீட்சையமான கேள்வி எனலாம்... பொதுவாகப் பார்த்தால்அம்மாவுக்கு ஆண் குழந்தைதான் விருப்பம். அப்பாவுக்கோ பெண் குழந்தைதான் சுவாசம். மகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும், அவள் மகளல்ல மறுபிறவிக் கொண்ட தாய் என்று. ஏன் இந்த ஈர்ப்பும் பாசமும் மகளிடத்தில் ஒரு தந்தைக்கு ? புரியாத புதிர் போலும்...


       ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவினை வர்ணிக்கக் கூடுமா? இல்லை சொல்லற்று தோற்பேனோ நான் ? சொல்லுக்குள்ளே கட்டிப் போட விரும்பவும் இல்லை, இயலவும் இல்லை.தாயின் கருவறையில் உதிர்த்தத் தருணத்திலிருந்து, அவர் கருகி சாம்பலாகும் வரை நெஞ்சினில் சுமப்பவர் தந்தை. மகளின் உச்சிதனை நுகர்ந்து உலகினேயே மறப்பவன் தான் தந்தை . மறந்தும் கூட, இதயத்துடிப்பு, மகளுக்காகத் துடிக்கத் தவறாது. மறக்கும் அத்தருணம் மரணமாகத்தான் இருக்கக் கூடும்.


                 "காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிற்பாரு, காய்ச்சல் அடிச்சா சூரியன கைது செய்யப் பாப்பாரு" எனும் பாடல் வரிகள் நம்மை உணர்த்துகின்றது அப்பா. அதுவே தந்தையின் உள்ளம்.அன்னையைப் போல நீ அன்பு, பாசம், அரவணைப்பு , அக்கறை, தைரியம் என என்னிடத்தில் ஊட்டினாலும், நீ என்னிடத்தில் வைத்த நம்பிக்கையே எல்லாவற்றிலும் உயரியது. அதுவே என் பலம், வாழ்க்கைக்கான உரம். கூட்டில் அடைப்பட்டுக் கிடந்த கிளியினைச் சுதந்திரமாகப் பறக்கச் செய்த எஜமானன் நீயோ? நான் காணா உயரம் நீ காண வேண்டும் என எண்ணும் என் தந்தை நீயோ ?


                ஆண் பெண் வேறுபாட்டினைத் தூர வீசியவன் நீ.பெண்ணானவள் ஆளப் பிறந்தவள், அடங்கிப் போக அல்ல என ஓரத்துக் கூறும் உறவு நீ. சவால்கள் நிறைந்த உலகில் நீந்தச் சொல்லிக் கொடுத்தாய். பெண்ணானவள் அதிகம் படிக்கத் தேவையில்லை எனும் வழக்கை உடைத்தெரிந்தாய். " உன் விருப்பம் போல் வாழ்" என சொல்லி சிறகினை விரிக்கச் சொன்னாய். எனக்கன் உரிமையைப் பெற்றுக் கொடுத்தாய்.


                   என் மீதான நம்பிக்கைச் சுடர்தனை ஏற்றியவன் நீ. என் கனவினை உன் கனவாய்க் கண்டாய். அதை மெய்ப்பிக்க உன் உறக்கம் தொலைத்தாய்.ஏன் இந்த அபரிமிதமான நம்பிக்கை மகளிடத்தில் ஒரு தந்தைக்கு ? வேராரும் அப்படி இல்லையே அப்பா... ஒரு வேளை, அவர்கள் யாரும் உன் கண் வழி என்னைப் பார்க்கவில்லைப் போலும். பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாய் என்னை வளர்த்தாயோ ? அல்லது பாரதியாய் எனக்கென உயிர்ப் பிறந்தாயோ........ ?


***பிடித்த வரிகள் ( கமல்ஹாசனின் வரிகள்)

- மகளே ஓ மகளே,
  நீயும் என் காதலியே, 
  எனதம்மை போல, 
  எனைப்  பிரிந்தும்  நீயின்பம் காண்பாயா?
  இல்லை காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா ?