பெண்

பெண்
பெண்ணே அறிந்துக் கொண்டேன் , இயல்பை அழகு என்பேன்

Monday, 28 November 2016

பாரதியாய் எனெக்கென உயிர்ப் பிறந்தாயோ ?

    ஒரு அழகிய  திருமண பந்தத்தின் மலர்ச்சியே குழந்தைகள். ஏனென்று புரியவில்லை எனக்கு. எனக்கு மட்டும் அல்ல, பலருக்கும் மனதில் எழுந்த மிகவும் பரீட்சையமான கேள்வி எனலாம்... பொதுவாகப் பார்த்தால்அம்மாவுக்கு ஆண் குழந்தைதான் விருப்பம். அப்பாவுக்கோ பெண் குழந்தைதான் சுவாசம். மகளைப் பெற்ற அப்பாவுக்குத்தான் தெரியும், அவள் மகளல்ல மறுபிறவிக் கொண்ட தாய் என்று. ஏன் இந்த ஈர்ப்பும் பாசமும் மகளிடத்தில் ஒரு தந்தைக்கு ? புரியாத புதிர் போலும்...


       ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவினை வர்ணிக்கக் கூடுமா? இல்லை சொல்லற்று தோற்பேனோ நான் ? சொல்லுக்குள்ளே கட்டிப் போட விரும்பவும் இல்லை, இயலவும் இல்லை.தாயின் கருவறையில் உதிர்த்தத் தருணத்திலிருந்து, அவர் கருகி சாம்பலாகும் வரை நெஞ்சினில் சுமப்பவர் தந்தை. மகளின் உச்சிதனை நுகர்ந்து உலகினேயே மறப்பவன் தான் தந்தை . மறந்தும் கூட, இதயத்துடிப்பு, மகளுக்காகத் துடிக்கத் தவறாது. மறக்கும் அத்தருணம் மரணமாகத்தான் இருக்கக் கூடும்.


                 "காத்தடிச்சா மகளுக்கு காவலுக்கு நிற்பாரு, காய்ச்சல் அடிச்சா சூரியன கைது செய்யப் பாப்பாரு" எனும் பாடல் வரிகள் நம்மை உணர்த்துகின்றது அப்பா. அதுவே தந்தையின் உள்ளம்.அன்னையைப் போல நீ அன்பு, பாசம், அரவணைப்பு , அக்கறை, தைரியம் என என்னிடத்தில் ஊட்டினாலும், நீ என்னிடத்தில் வைத்த நம்பிக்கையே எல்லாவற்றிலும் உயரியது. அதுவே என் பலம், வாழ்க்கைக்கான உரம். கூட்டில் அடைப்பட்டுக் கிடந்த கிளியினைச் சுதந்திரமாகப் பறக்கச் செய்த எஜமானன் நீயோ? நான் காணா உயரம் நீ காண வேண்டும் என எண்ணும் என் தந்தை நீயோ ?


                ஆண் பெண் வேறுபாட்டினைத் தூர வீசியவன் நீ.பெண்ணானவள் ஆளப் பிறந்தவள், அடங்கிப் போக அல்ல என ஓரத்துக் கூறும் உறவு நீ. சவால்கள் நிறைந்த உலகில் நீந்தச் சொல்லிக் கொடுத்தாய். பெண்ணானவள் அதிகம் படிக்கத் தேவையில்லை எனும் வழக்கை உடைத்தெரிந்தாய். " உன் விருப்பம் போல் வாழ்" என சொல்லி சிறகினை விரிக்கச் சொன்னாய். எனக்கன் உரிமையைப் பெற்றுக் கொடுத்தாய்.


                   என் மீதான நம்பிக்கைச் சுடர்தனை ஏற்றியவன் நீ. என் கனவினை உன் கனவாய்க் கண்டாய். அதை மெய்ப்பிக்க உன் உறக்கம் தொலைத்தாய்.ஏன் இந்த அபரிமிதமான நம்பிக்கை மகளிடத்தில் ஒரு தந்தைக்கு ? வேராரும் அப்படி இல்லையே அப்பா... ஒரு வேளை, அவர்கள் யாரும் உன் கண் வழி என்னைப் பார்க்கவில்லைப் போலும். பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாய் என்னை வளர்த்தாயோ ? அல்லது பாரதியாய் எனக்கென உயிர்ப் பிறந்தாயோ........ ?


***பிடித்த வரிகள் ( கமல்ஹாசனின் வரிகள்)

- மகளே ஓ மகளே,
  நீயும் என் காதலியே, 
  எனதம்மை போல, 
  எனைப்  பிரிந்தும்  நீயின்பம் காண்பாயா?
  இல்லை காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா ?



                 


8 comments:

  1. அழகிய வரிகள் மட்டுமல்ல, உயிருள்ள வரிகள்...💗

    ReplyDelete
  2. மிக்க அருமை. மேலும் பல கட்டுரைகள் எழுத எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. உந்துதலுக்கு நன்றி அன்புக்குரியவளே

      Delete
  3. தேனாக எழுந்துள்ள ஒவ்வொரு வரிகளும் கூட்டுக்குள்ளே இருந்து கூவும் குயிலின் மனயேக்கங்களின் வெளிப்பாடு.அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, தேன் சாற்றினை காதில் பிழிந்தாற்போல ஒரு உணர்வு. ஆதரவுக்கு மிக்க நன்றி தோழி 👌🙏

      Delete
  4. அருமை தோழி...தந்தை மகளுக்கான இடையே உள்ள அன்பையும் தனின் உணதத்தைதையும் உணர்த்து இரசித்து எழுதி உள்ளீர்.மேலும் சிறப்பான படைப்புகளைப் படைப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அதனை புரிந்து உய்த்துணர்ந்து படித்திருப்பதை அறிவேன் தோழி. காலத்திற்கு ஏற்றாற்போல இன்னும் சிறப்பாக படைத்திட முயல்கிறேன் தோழி. மீண்டும் எனது நன்றிகள் 🙏💕

      Delete